Thursday, December 9, 2010

குறுந்தொகை(14)

குறுந்தொகை பாடல்(14)
அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.
தலைவன் கூற்றாக அமைந்த குறிஞ்சித்திணைப் பாடல்.பாடலை இயற்றியவர் தொல் கபிலர்.
களவுக் காலத்து யான் தலைவியைப் பிறரறியாதவாறு கூடியதைக் குறித்து இவ்வூரார் அலர் தூற்றியிருப்பர். எங்கள் இருவரையும் பற்றி அலர் தூற்றும் இவ்வூராரின் முன், நான் என் தலைவியைப் (மடல் ஏறி) பெறுவேன். நான் அவளைப் (மடல் ஏறி) பெற்றபோது ‘நல்லோள் கணவன் இவன்’ என்று தெருவில் பலரும் கூறி நிற்பர்.
கருத்துரை
அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறியாவது) பெற்று விடுவேன். பெற்றபின் இந்த ஊரார் அறிந்து கொள்ளட்டும்.அவ்வாறு ஊரார் தெரிந்தபின் தெருவில் பல பேரும் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும்போது சிறிதுபொழுது நாணமடைவோம்.
சொற்பொருள் விளக்கம்
அமிழ்து பொதி-அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற்போன்று(இனிமையான சொற்களைப் பேசும்),செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த- அஞ்சுவதற்குக் காரணமான, வைஎயிற்று- கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை- சில சொற்களைப் பேசும் பெண்ணை,(என் தலைவியை),பெறுகதில்-பெறுவதற்கு விருப்பமுடையேன்.அம்ம- கேட்பாயாக. பெற்றாங்கு- பெற்றபின்,அறிகதில் அம்ம இவ்வூரே- அறிந்து கொள்ளட்டும் இவ்வூரவர், மறுகில்-தெருவில், நல்லோள் கணவன்-நல்ல பெண்ணின் கணவன் , இவன் என்று, பல்லோர் கூற-பல பேரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும், நாணுகம்-நாணமடைவோம்,சிறிதே- சிறிது பொழுது.
எந்த நுட்பமான உணர்வினையும் பாடலில் வடிக்கமுடியுமா என்றால் முடியும் என்கிறார் கவிஞர்.காதலியை அடையத் துடிக்கும் காதலனின் உள்ளத் துடிப்பே இப்பாடல். இப்பொழுது ஊராரெல்லாம் ‘இவன் காதலி இவள்’ என்றும் ‘இவள் காதலன் இவன்’ என்றும் மறைவாக சொல்லுகின்ற சொல்லுக்குப் பெரிதும் நாணமடைகின்றோம். ஆனால் நான் மடலேறி என் தலைவியைப் பெற்றபின் பலரும் தெருவில் வெளிப்படையாக ‘இவள் கணவன்’ என்று கூறுகின்றபோது சிறிது பொழுதே நாணமடைவோம். என்ன நயமிக்க வரிகள்! நம் சமுதாயத்தின் ஆணிவேரின் ஆற்றலை நினைக்கும்போது பெருமிதம், தானே தொற்றிக்கொள்கிறது.

No comments:

Post a Comment