Thursday, December 9, 2010

குறுந்தொகை(14)

குறுந்தொகை பாடல்(14)
அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.
தலைவன் கூற்றாக அமைந்த குறிஞ்சித்திணைப் பாடல்.பாடலை இயற்றியவர் தொல் கபிலர்.
களவுக் காலத்து யான் தலைவியைப் பிறரறியாதவாறு கூடியதைக் குறித்து இவ்வூரார் அலர் தூற்றியிருப்பர். எங்கள் இருவரையும் பற்றி அலர் தூற்றும் இவ்வூராரின் முன், நான் என் தலைவியைப் (மடல் ஏறி) பெறுவேன். நான் அவளைப் (மடல் ஏறி) பெற்றபோது ‘நல்லோள் கணவன் இவன்’ என்று தெருவில் பலரும் கூறி நிற்பர்.
கருத்துரை
அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறியாவது) பெற்று விடுவேன். பெற்றபின் இந்த ஊரார் அறிந்து கொள்ளட்டும்.அவ்வாறு ஊரார் தெரிந்தபின் தெருவில் பல பேரும் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும்போது சிறிதுபொழுது நாணமடைவோம்.
சொற்பொருள் விளக்கம்
அமிழ்து பொதி-அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற்போன்று(இனிமையான சொற்களைப் பேசும்),செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த- அஞ்சுவதற்குக் காரணமான, வைஎயிற்று- கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை- சில சொற்களைப் பேசும் பெண்ணை,(என் தலைவியை),பெறுகதில்-பெறுவதற்கு விருப்பமுடையேன்.அம்ம- கேட்பாயாக. பெற்றாங்கு- பெற்றபின்,அறிகதில் அம்ம இவ்வூரே- அறிந்து கொள்ளட்டும் இவ்வூரவர், மறுகில்-தெருவில், நல்லோள் கணவன்-நல்ல பெண்ணின் கணவன் , இவன் என்று, பல்லோர் கூற-பல பேரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும், நாணுகம்-நாணமடைவோம்,சிறிதே- சிறிது பொழுது.
எந்த நுட்பமான உணர்வினையும் பாடலில் வடிக்கமுடியுமா என்றால் முடியும் என்கிறார் கவிஞர்.காதலியை அடையத் துடிக்கும் காதலனின் உள்ளத் துடிப்பே இப்பாடல். இப்பொழுது ஊராரெல்லாம் ‘இவன் காதலி இவள்’ என்றும் ‘இவள் காதலன் இவன்’ என்றும் மறைவாக சொல்லுகின்ற சொல்லுக்குப் பெரிதும் நாணமடைகின்றோம். ஆனால் நான் மடலேறி என் தலைவியைப் பெற்றபின் பலரும் தெருவில் வெளிப்படையாக ‘இவள் கணவன்’ என்று கூறுகின்றபோது சிறிது பொழுதே நாணமடைவோம். என்ன நயமிக்க வரிகள்! நம் சமுதாயத்தின் ஆணிவேரின் ஆற்றலை நினைக்கும்போது பெருமிதம், தானே தொற்றிக்கொள்கிறது.

Tuesday, December 7, 2010

குறுந்தொகை- (25 )யாரும் இல்லை எனத் தொடங்கும் பாடல்...

குறுந்தொகை(25)




யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.


தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியது. இப்பாடலை இயற்றியவர் கபிலர்.


கருத்துரை
தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான்.(பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!) அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும்.அதுவும் இல்லையே என்ற ஆதங்கம் பாடலில் தொனிக்கிறது.)


சொல்பொருள் விளக்கம்
யாரும் இல்லை-நானும் அவனும் இருந்த இடத்தில்) யாரும் இல்லை. தானே கள்வன்- (என்னைக் களவிலே கலந்த )கள்வனாகிய அவனே என்னோடு இருந்தான்.தான் அது பொய்ப்பின்- அவன் செய்த சூளுரை பொய்யானால், யான் எவன் செய்கோ-யான் என்ன செய்வேன்? தினைத்தாள் அன்ன- தினைப்பயிரின் நீண்டு வளர்ந்த தாளினைப் போல, (தினைப் பயிரின் நீண்ட இலைகளை இன்றும் தாள் என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.) சிறு பசுங்கால- சிறிய பசிய கால்கள், ஒழுகுநீர்-ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும்- ஆரல்மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு- குருகும் இருந்தது,தான் மணந்த –நானும் அவனும் களவில் கூடிய , ஞான்றே- நாளிலே.

குறுந்தொகை- யாயும் ஞாயும் எனத் தொடங்கும் பாடல்...

குறுந்தொகை(40) குறிஞ்சித்திணைப்பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயனீரார்.
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் பிரிந்துவிடுவானோ என்று அஞ்சுகின்ற தலைவியின் குறிப்பினை அறிந்து கொண்டு, தலைவன் தலைவியிடம் கூறியது
.ஊழ்வினையால் ஏற்பட்ட இந்தத் தொடர்பு என்றும் மாறாதது என்று கூறி, தலைவியின் அச்சத்தைப் போக்குகின்றான் தலைவன். அதுவே இப்பாடல்.
எதைச் சொல்லி, எப்படிச் சொல்லி தலைவியின் அச்சத்தைத் தெளிவிக்க என்று நினைத்த தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது.இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா ? அது போன்றதுதான் நம் அன்பும் என்கிறான். விளக்கம் கேட்பதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சொல்லும் தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே?
கருத்துரை
என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
சொல்பொருள் விளக்கம்
யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும் நீயும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்?செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் –தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் . பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?

Sunday, November 21, 2010

குறுந்தொகை- மாசுஅறக் கழீஇய(13) குறிஞ்சித்திணைப்பாடல்

குறுந்தொகை(13) குறிஞ்சித்திணைப் பாடல்
மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.


பாடலை இயற்றியவர் கபிலர்
தலைவன் தோழியிடம் அவள் மனம் அமைதியுறும் வகையில் தன் பிரிவினைக் கூறிப் பிரிந்து செல்கிறான்.இந்நிலையில், தலைவன் பிரிவால் வருந்திய தலைவி தோழியிடம் கூறியது.
மலை சார்ந்த சூழல் பின்னணியாய் அமைய, பெண்ணின் மனவுணர்வு காட்சியாய் விரிகிறது. மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.அங்கே குளிர்ச்சிக்குப் பஞ்சமில்லை.
தலைவியே சொல்கிறாள்… ‘குளிர்ச்சியான பாறைக்கல்லின் ஒரு பக்கத்தில் தலைவன் என்னோடு கூடியிருந்தான்.இப்போது என்னைப் பிரிந்து எனக்கு நோய் தந்தான். இதனால் ஏற்பட்ட வருத்தத்தினால் என் கண் மட்டுமல்ல;நின் கண்ணும் அல்லவா அழகிழந்தன.’என்று தன் தனிப்பட்ட துயரத்தோடு தோழியையும் உளப்படுத்திக் கூறுகின்றாள்.தலைவியின் இந்த அணுகுமுறையால் தோழியும் தலைவியின் துயரை நீக்குவதில் பெரும் முனைப்பு காட்டுவது இயல்புதானே?
பாடலின் கருத்துரை
தோழி! பெருமழை அலைத்தலால் மாசெல்லாம் நீங்கிய ஈரமான சொரசொரப்பான கரிய பாறைக்கல், (பாகனால்)புழுதி கழுவி சுத்தம் செய்யப்பெற்ற யானையைப் போல காட்சியளித்தது. அக்கல்லின் ஒரு பக்கத்தே கூடியிருந்தான் தலைவன். அவன்தான் நம்மைப் பிரிந்து துன்பம் தந்தான்.அதனால் குவளை மலர் போன்ற நம் அழகிய கண்களில் பசலை படர்ந்தன.
சொற்பொருள் விளக்கம்.
மாசுஅற- புழுதி முழுவதும், கழீஇய- கழுவப்பட்ட, யானை போல- யானையைப் போல, பெரும்பெயல்-பெருமழை, உழந்த-அலைத்த, இரும்பிணர்-கரிய சொரசொரப்பான, துறுகல்-பாறை (மலையின் சிறு பகுதி),பைதல்- ஈரம், ஒருதலை- ஒரு பக்கம், சேக்கும்- கூடும், நாடன்- தலைவன், நோய் தந்தனனே-நோய் தந்துவிட்டனனே, பசலை ஆர்ந்த- பசலை படர்ந்த, நம் குவளை –நம்முடைய குவளை போன்ற , அம் கண்ணே- அழகிய கண்ணே.
தலைவி தலைவனைப் பற்றிக் கூறும்போது ‘சேக்கும் நாடன்’ என்கிறாள். ஈண்டு குறிஞ்சித் திணையின் உயிர்ப்பொருளாம் உரிப்பொருள், பாவூடு நூலாய் கலந்துள்ள தன்மை நினைந்து இன்புறற்பாலது.

Sunday, August 22, 2010

குறுந்தொகை- நிலத்தினும் எனத் தொடங்கும் பாடல்...

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.(3)
குறுந்தொகையில் மூன்றாவது பாடல். தேவகுலத்தார் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான் தலைவன். ஆனால் திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை.அப்பெண்ணும் அவனைக் காதலிக்கிறாள் என்பது அப்பெண்ணின் தோழிக்குத் தெரியும். இப்படியே களவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கல்யாணம் தான் எப்போது?கவலை தோழிக்கு! தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான். தோழி பார்க்கிறாள் அவனை ! இதுதான் சமயம் என்று தலைவனைப் பழித்துப் பேசினாள் தோழி!பொறுப்பாளா தலைவி?
தலைவனோடு தனக்குள்ள உறவின் உயர்வைச் சொல்கிறாள் தோழியிடம்! ”இந்த நிலமும், வானும், நீரும் எப்பொழுதும் இங்கே இருந்தாலும் உரிய நேரத்தில் இயைந்து தானே இவ்வுலகத்திற்கு பயனினை அளிக்கின்றன. அதைப் போல எங்கள் நட்பும் திருமணம் செய்து கொண்டு வாழும் நாளில் நன்மையைக் கொடுக்கும் . அதுவரை பொறுத்திரு தோழி! ” என்று இயற்கையின் மூலம் வாழ்க்கையின் இயல்புணர்த்தி புரிய வைக்கிறாள் தோழிக்கு! மறைந்து நிற்கும் மணவாளன் செவியிலும் மங்கையின் அன்புக் குரல் கேட்கத்தானே செய்யும்? அதுவே அவர்கள் திருமணம் விரைவில் நிறைவேற வழி வகுக்குமல்லவா
கருத்துரை
” கரிய கொம்புகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நாடு என் தலைவனின் நாடு. அப்பூக்களில் உண்ட தேனினை, வண்டுகள் தொகுத்துத் தேனடையாகக் கொடுக்கிறது. இத்தனை வளம் நிறைந்த குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது”

பாடலின் பொருள் இது மட்டும் தானா? ஆயிரம் உட்பொருளை உள்ளடக்கிப் படைத்த அன்புக் கவிதை இது! எப்படி வண்டு குறிஞ்சிப் பூக்களில் தேனெடுத்து தேனடையாக்குகின்றதோ அப்படித்தான் குறிஞ்சித் தலைவனோடு நான் கொண்ட நட்பும் அன்பால் பெருகி இல்லற வாழ்வாய் சிறப்புறும் என்று தலைவி சொல்லும் முறை தேனினும் இனிது.
தலைவனோடு தான் கொண்ட நட்பினை இத்தன்மை என்று அளந்து கூற முடியாது என்பதைத் தோழிக்குச் சொல்லும் விதம்… எங்கே கற்றாள் இந்தத் தமிழின் ஆட்சியை! என்று சொல்லத் தோன்றுகிறது. நிலம், வானம் , நீர் மூன்றும் வெவ்வேறானவை தான். ஆனால் அவை இணையும் போது தான் உலகிற்குப் பயனளிக்கும் என்பது எனக்கும் தெரியும் . என் தலைவனுக்கும் தெரியும். எங்கள் நட்பும் இணைந்த நட்பு. இதில் ஒருவரை விட்டு ஒருவர் தனித்து பயன் பெறுதல் இல்லை! என்ற உட்பொருளும் தோன்ற நிலம், வான், நீரைக் குறிப்பிட்டிருத்தலை என்னவென்று புகல்வது?
சரி, நிலத்தை விடப் பெரியது.வானை விட உயர்ந்தது. நீரினை விட ஆழமானது என்று பெரிது, உயர்ந்தது, ஆழமானது என்று குறிப்பிடுதலிலும் பொருள் உண்டு.” இவை எல்லாம் கூட ஒரு காலத்தில் வளம் குன்றலாம்.வானம் பொய்க்கலாம். நீரின் அளவு குறையலாம் . ஆனால், எம் நட்பு அப்படிப்பட்டதன்று. எப்பொழுதும் ஒரே நிலையில் சிறப்புடன் திகழ்வது ” என்பதை இயற்கையைக் காட்டி ”இயற்கையின் இனிது எம் நட்பு ” காதலை உயர்த்திச் சொல்லும் காதலியின் சொல்வன்மை நமக்கே இனித்ததென்றால் காதலனுக்கு…?

Monday, August 16, 2010

சங்க இலக்கியம்-குறுந்தொகை-வண்டிடம் பேசும் தலைவன்...?

                        சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ”நல்ல குறுந்தொகை” என்று பாராட்டப்பட்ட நூல் குறுந்தொகை. எளிய சொல்லாட்சியும் குறைந்த அடிகளும் உடையது. அகப்பொருளை இனிய காட்சிகளாக்கி விளக்கும் அழகிய இலக்கியம். தமிழரின் பண்பட்ட காதல் வாழ்வைப் பகரும் கவினுறு இலக்கியம். இதில் இரண்டாவது பாடல் இறையனார் என்பவரால் பாடப்பட்டது.
                   மலையும் மலை சார்ந்த இடமுமே குறிஞ்சி . தமிழரின் வாழ்க்கை தொடங்கி வளம் பெற்ற இடம் இது. அழகியல் கொட்டிக் கிடக்கும் இடமும் இது தான். குன்றுதோறும் குமரன் இருக்கும் காரணமும் அது தான். தமிழரின் பண்டைய எச்சங்களைத் தாங்கி நிற்பவையே, குறிஞ்சி நிலத் தலைவன் முருகனின் குன்றிலிருக்கும் கோவில்கள்!
குறுந்தொகையில் வரும் கொங்கு தேர் வாழ்க்கை என்ற இந்தப் பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது .திருவிளையாடலிலே வரும் திகட்டாத காட்சி இது. இங்கே குறுந்தொகை வழி அப்பாடலின் பொருளைச் சுவைப்போம்.
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில்இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?(குறுந்தொகை.2)

தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவன், தன் அன்பை வெளிப்படுத்த தலைவியின் இயற்கை அழகைப் பாராட்டும் இனிய பாடல்.காதற் கவிதைகள் எத்தனையோ கேட்ட போதும் , பாட்டினுள்ளே பல பொருள்களை மறைத்து இப்படியும் பாட முடியுமா என்று வியக்க வைக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.
தலைவன், தலைவியோடு இன்புற்று மகிழ்ந்த மகிழ்ச்சியில் வெளிப்பட்ட வார்த்தைகள் இவை. வண்டைப் பார்த்துப் பேசுகின்றான்…
” பூக்களிலே இருக்கின்ற தேனினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினைப் பெற்ற வண்டே!
நான் இன்புற வேண்டும் என்பதற்காகச் சொல்லாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறு-வாயாக. என்றும் என்னோடு பொருந்திய, உரிமை நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும் வரிசையான பற்களும் கொண்ட அவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?”
 கூடி மகிழ்ந்த போது, அவளின் கூந்தல் இவனுக்கு மலரினும் மணம் வீசியது. அந்த உள்ள மகிழ்வினை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.அவர்கள் இருவதலைவியோடுரும் இருப்பது மலை அடர்ந்த குறிஞ்சி நிலம். அங்கே மலர்ந்து கிடக்கும் கோடிக்கணக்கான மலர்களிலே தேனெடுக்க வண்டு வந்தது. பார்த்தான். வண்டு மலர் விட்டு மலர் தாவி ஆராய்ந்து தேனெடுக்கும் அழகைக் கண்டான். வண்டே! நீ ஆராய்ந்து தேனெடுக்கும் அறிவு பெற்றிருப்பதால் உன்னிடமே கேட்கின்றேன். என் தலைவியின் கூந்தலில் வீசும் மணத்தினைப் போல நீ தேனெடுக்கும் மலர்களிலே மணம் வீசும் மலர்களும் இருக்கின்றனவா? என்கிறான்.
 தான் கொண்ட நட்பு பயிலியது கெழிஇய நட்பு என்கிறான்.உள்ளம் பொருந்திதலைவியோடுய உரிமையான நட்பு என்று தனக்கும் தலைவிக்குமான உறவின் மேன்மையினை நாகரிகமான சொற்களால் நயமாக உணர்த்துகின்றான்.இவனும் தலைவியும் சந்தித்திருக்கும் இடம் மலைப்பகுதி என்பதால் மயில்கள் உலவுகின்றன.(இதனால்தான் முருகனுக்கும் மயிலை வாகனமாக வைத்தனர்.)அதைப் பார்க்கும்போது கூட தான் தழுவிய தலைவியின் இயல்புதான் நினைவுக்கு வருகிறது.அதனால்தான் தலைவியின் இயல்பினை,
மயில் இயல் என்கிறான்.
தலைவியைத் தான் சந்தித்தபோது தலைவியின் முகத்தில் தெரிந்த முறுவலும், தழுவிய போது உணர்ந்த அவள் உடலின் மென்மையும் கூந்தலில் நுகர்ந்த மணமும் இயற்கைச் சூழலில் தலைவனின் இயல்பான மன உணர்வினைக் காட்டும் இனிய படைப்பானது.தலைவிக்கும் தனக்கும் உள்ள உறவினை ”நட்பு” என்று குறிக்கும் பண்டைத் தமிழரின் பண்பட்ட நிலையினைக் காணும் போதெல்லாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவுமுண்டோ?