Saturday, January 1, 2011

நற்றிணை-1


 குறிஞ்சித்திணைப்பாடல் -தலைவிக் கூற்று
    நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள பிரிபு அறியலரே;
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;          5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
    சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
இயற்றியவர் -கபிலர்
துறை -பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
ருத்துரை
சொல்லிய சொல்லிலிருந்து  மாறுபடாதவர். நம்மோடு நிலைத்த இனிமையான தன்மையுடையர். என் தோள்களை என்றும் பிரிதல் அறியாதவர். (வண்டு)தாமரைப்பூவின் குளிர்ச்சியான மகரந்தத்தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டுபோய் சேர்த்து வைத்த இனிய தேனைப்போல(தாமரைத்தாது-தலைவனின் உள்ளம், சந்தன மரம்-தலைவியின் உள்ளம், தேன்-இருவரின் அன்பு) நிச்சயமாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு. நீர் இன்றி இவ்வுலகமானது சிறக்கவியலாது. அதுபோல, அவர் இன்றி நாம் சிறத்தலில்லை.  அவரும் நம்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக கருணையோடு நடப்பவர். அப்படியிருக்க,  பிரிவதால் நம் மணம் வீசும் நெற்றியில் ஏற்படும் பசலை படர்வதற்கு அஞ்சுதலையுடைய அவர், பிரிதல் என்ற சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ?அவ்வாறு செய்தற்குக்கூட அறியாதவர் அவர்!
சொற்பொருள் விளக்கம்
        நின்ற சொல்லர்- மாறுபடாத சொல்லினை உடையர்; நீடு -  நிலைத்த; தோன்று இனியர்- இனிய தன்மையுடையர்;என்றும் என் தோள்-என்றும் என் தோள்களை, பிரிபு அறியலரே- பிரிவதற்கு அறியாதவர்,தாமரைத் தண் தாது-தாமரை மலரின் குளிர்ச்சியான மகரந்தத்தாதினை, ஊதி - துளைத்து, மீ-மேலிடம், மிசை- மேலே,சாந்தில் தொடுத்த-சந்தனமரத்தில் சேர்த்துவைத்த, தீம் தேன் போல-இனிய தேன் போல,புரைய –உயர்வு,மன்ற-நிச்சயமாக, புரையோர் –உயர்ந்தோர்,கேண்மை-நட்பு;        நீர் இன்று – நீர் இல்லாது,அமையா –சிறப்பாகாத,உலகம் போல- உலகத்தைப் போல,தம் இன்று- அவர் இல்லாது,  அமையா – சிறப்படையா, நம் –நம்மை,நயந்து அருளி-விரும்பி கருணையோடு,நறு நுதல் – மணம் வீசும் நெற்றி, பசத்தல் அஞ்சி-பசலை படரும் என்பதற்கு அஞ்சி,  சிறுமை உறுபவோ?-சிறுமையான  செயலைச் செய்தற்கு நினைப்பாரோ,  செய்பு அறியலரே- செய்தற்கு அறியாதவரே 


குறுந்தொகை-18



குறிஞ்சித்திணைப் பாடல். இயற்றியவர்- கபிலர்.
வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பபெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!
தலைவியை இரவுப்பொழுது சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவனிடம் தோழி, விரைவில் தலைவியை வரைந்து(மணம்செய்தல்) கொள்ளுமாறு கூறுவது
கருத்துரை
மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரிலுள்ள கொம்புகளில் பழங்கள் தொங்கும் வேர்ப்பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே!
விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை ஆக்கிக் கொள்க! உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருந்தவாறு , தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.
சொற்பொருள் விளக்கம்
 வேரல்வேலி- மூங்கில்வேலி, வேர்க்கோட்டு - வேரிலுள்ள கொம்புகளில், பலவின்-பலா மரத்தின், சாரல் நாட- மலைநாட்டவனே, செவ்வியை –வரைந்து கொள்ளும் காலத்தை, ஆகு-உண்டாக்கு, மதி-(அசைச்சொல்), சிறுகோட்டு- சிறிய கொம்பிலே, பெரும்பழம்- பெரிய பலாப்பழம், தூங்கி ஆங்கு- தொங்கிக் கொண்டிருந்தவாறு,  இவள்-தலைவி, உயிர் தவச் சிறிது- உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே-விருப்பமோ பெரியதே!
      மலைநிலம்.  கண்முன்னே தோன்றும் பலாமரமும் அதன் வேர்ப்பகுதியிலே சிறிய காம்பிலே தொங்குகின்ற பெரிய பலாப்பழமும் தோழிக்கு தலைவியின் உயிராகவும் தலைவன் மீது கொண்ட தலைவி கொண்ட மட்டற்ற அன்பாகவும் தெரிகிறது.இயற்கையான காதல் உணர்வை இயற்கையோடு பொருத்திப் பார்த்து இன்புற்று வாழ்ந்த நம்மவர் தம் ஈடு இணையற்ற இயல்பினை இயம்ப இயம்ப இன்பமன்றி வேறேது?