குறிஞ்சித்திணைப் பாடல். இயற்றியவர்- கபிலர்.
வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பபெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!
தலைவியை இரவுப்பொழுது சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவனிடம் தோழி, விரைவில் தலைவியை வரைந்து(மணம்செய்தல்) கொள்ளுமாறு கூறுவது
கருத்துரை
மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரிலுள்ள கொம்புகளில் பழங்கள் தொங்கும் வேர்ப்பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே!
விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை ஆக்கிக் கொள்க! உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருந்தவாறு , தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.
சொற்பொருள் விளக்கம்
வேரல்வேலி- மூங்கில்வேலி, வேர்க்கோட்டு - வேரிலுள்ள கொம்புகளில், பலவின்-பலா மரத்தின், சாரல் நாட- மலைநாட்டவனே, செவ்வியை –வரைந்து கொள்ளும் காலத்தை, ஆகு-உண்டாக்கு, மதி-(அசைச்சொல்), சிறுகோட்டு- சிறிய கொம்பிலே, பெரும்பழம்- பெரிய பலாப்பழம், தூங்கி ஆங்கு- தொங்கிக் கொண்டிருந்தவாறு, இவள்-தலைவி, உயிர் தவச் சிறிது- உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே-விருப்பமோ பெரியதே!
மலைநிலம். கண்முன்னே தோன்றும் பலாமரமும் அதன் வேர்ப்பகுதியிலே சிறிய காம்பிலே தொங்குகின்ற பெரிய பலாப்பழமும் தோழிக்கு தலைவியின் உயிராகவும் தலைவன் மீது கொண்ட தலைவி கொண்ட மட்டற்ற அன்பாகவும் தெரிகிறது.இயற்கையான காதல் உணர்வை இயற்கையோடு பொருத்திப் பார்த்து இன்புற்று வாழ்ந்த நம்மவர் தம் ஈடு இணையற்ற இயல்பினை இயம்ப இயம்ப இன்பமன்றி வேறேது?
குறுந்தொகை பாடல் அருமை
ReplyDelete