Thursday, December 9, 2010

குறுந்தொகை(14)

குறுந்தொகை பாடல்(14)
அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்துஇலங்கு வைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே! மறுகில்
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே.
தலைவன் கூற்றாக அமைந்த குறிஞ்சித்திணைப் பாடல்.பாடலை இயற்றியவர் தொல் கபிலர்.
களவுக் காலத்து யான் தலைவியைப் பிறரறியாதவாறு கூடியதைக் குறித்து இவ்வூரார் அலர் தூற்றியிருப்பர். எங்கள் இருவரையும் பற்றி அலர் தூற்றும் இவ்வூராரின் முன், நான் என் தலைவியைப் (மடல் ஏறி) பெறுவேன். நான் அவளைப் (மடல் ஏறி) பெற்றபோது ‘நல்லோள் கணவன் இவன்’ என்று தெருவில் பலரும் கூறி நிற்பர்.
கருத்துரை
அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறியாவது) பெற்று விடுவேன். பெற்றபின் இந்த ஊரார் அறிந்து கொள்ளட்டும்.அவ்வாறு ஊரார் தெரிந்தபின் தெருவில் பல பேரும் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும்போது சிறிதுபொழுது நாணமடைவோம்.
சொற்பொருள் விளக்கம்
அமிழ்து பொதி-அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற்போன்று(இனிமையான சொற்களைப் பேசும்),செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த- அஞ்சுவதற்குக் காரணமான, வைஎயிற்று- கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை- சில சொற்களைப் பேசும் பெண்ணை,(என் தலைவியை),பெறுகதில்-பெறுவதற்கு விருப்பமுடையேன்.அம்ம- கேட்பாயாக. பெற்றாங்கு- பெற்றபின்,அறிகதில் அம்ம இவ்வூரே- அறிந்து கொள்ளட்டும் இவ்வூரவர், மறுகில்-தெருவில், நல்லோள் கணவன்-நல்ல பெண்ணின் கணவன் , இவன் என்று, பல்லோர் கூற-பல பேரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும், நாணுகம்-நாணமடைவோம்,சிறிதே- சிறிது பொழுது.
எந்த நுட்பமான உணர்வினையும் பாடலில் வடிக்கமுடியுமா என்றால் முடியும் என்கிறார் கவிஞர்.காதலியை அடையத் துடிக்கும் காதலனின் உள்ளத் துடிப்பே இப்பாடல். இப்பொழுது ஊராரெல்லாம் ‘இவன் காதலி இவள்’ என்றும் ‘இவள் காதலன் இவன்’ என்றும் மறைவாக சொல்லுகின்ற சொல்லுக்குப் பெரிதும் நாணமடைகின்றோம். ஆனால் நான் மடலேறி என் தலைவியைப் பெற்றபின் பலரும் தெருவில் வெளிப்படையாக ‘இவள் கணவன்’ என்று கூறுகின்றபோது சிறிது பொழுதே நாணமடைவோம். என்ன நயமிக்க வரிகள்! நம் சமுதாயத்தின் ஆணிவேரின் ஆற்றலை நினைக்கும்போது பெருமிதம், தானே தொற்றிக்கொள்கிறது.

Tuesday, December 7, 2010

குறுந்தொகை- (25 )யாரும் இல்லை எனத் தொடங்கும் பாடல்...

குறுந்தொகை(25)




யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.


தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியது. இப்பாடலை இயற்றியவர் கபிலர்.


கருத்துரை
தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே இருந்தான்.(பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!) அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும்.அதுவும் இல்லையே என்ற ஆதங்கம் பாடலில் தொனிக்கிறது.)


சொல்பொருள் விளக்கம்
யாரும் இல்லை-நானும் அவனும் இருந்த இடத்தில்) யாரும் இல்லை. தானே கள்வன்- (என்னைக் களவிலே கலந்த )கள்வனாகிய அவனே என்னோடு இருந்தான்.தான் அது பொய்ப்பின்- அவன் செய்த சூளுரை பொய்யானால், யான் எவன் செய்கோ-யான் என்ன செய்வேன்? தினைத்தாள் அன்ன- தினைப்பயிரின் நீண்டு வளர்ந்த தாளினைப் போல, (தினைப் பயிரின் நீண்ட இலைகளை இன்றும் தாள் என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.) சிறு பசுங்கால- சிறிய பசிய கால்கள், ஒழுகுநீர்-ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும்- ஆரல்மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு- குருகும் இருந்தது,தான் மணந்த –நானும் அவனும் களவில் கூடிய , ஞான்றே- நாளிலே.

குறுந்தொகை- யாயும் ஞாயும் எனத் தொடங்கும் பாடல்...

குறுந்தொகை(40) குறிஞ்சித்திணைப்பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயனீரார்.
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் பிரிந்துவிடுவானோ என்று அஞ்சுகின்ற தலைவியின் குறிப்பினை அறிந்து கொண்டு, தலைவன் தலைவியிடம் கூறியது
.ஊழ்வினையால் ஏற்பட்ட இந்தத் தொடர்பு என்றும் மாறாதது என்று கூறி, தலைவியின் அச்சத்தைப் போக்குகின்றான் தலைவன். அதுவே இப்பாடல்.
எதைச் சொல்லி, எப்படிச் சொல்லி தலைவியின் அச்சத்தைத் தெளிவிக்க என்று நினைத்த தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது.இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா ? அது போன்றதுதான் நம் அன்பும் என்கிறான். விளக்கம் கேட்பதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சொல்லும் தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே?
கருத்துரை
என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
சொல்பொருள் விளக்கம்
யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும் நீயும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்?செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் –தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் . பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?