Tuesday, December 7, 2010

குறுந்தொகை- யாயும் ஞாயும் எனத் தொடங்கும் பாடல்...

குறுந்தொகை(40) குறிஞ்சித்திணைப்பாடல்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயனீரார்.
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் பிரிந்துவிடுவானோ என்று அஞ்சுகின்ற தலைவியின் குறிப்பினை அறிந்து கொண்டு, தலைவன் தலைவியிடம் கூறியது
.ஊழ்வினையால் ஏற்பட்ட இந்தத் தொடர்பு என்றும் மாறாதது என்று கூறி, தலைவியின் அச்சத்தைப் போக்குகின்றான் தலைவன். அதுவே இப்பாடல்.
எதைச் சொல்லி, எப்படிச் சொல்லி தலைவியின் அச்சத்தைத் தெளிவிக்க என்று நினைத்த தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது.இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா ? அது போன்றதுதான் நம் அன்பும் என்கிறான். விளக்கம் கேட்பதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சொல்லும் தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே?
கருத்துரை
என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
சொல்பொருள் விளக்கம்
யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும் நீயும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்?செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் –தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் . பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?

No comments:

Post a Comment