Sunday, November 21, 2010

குறுந்தொகை- மாசுஅறக் கழீஇய(13) குறிஞ்சித்திணைப்பாடல்

குறுந்தொகை(13) குறிஞ்சித்திணைப் பாடல்
மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.


பாடலை இயற்றியவர் கபிலர்
தலைவன் தோழியிடம் அவள் மனம் அமைதியுறும் வகையில் தன் பிரிவினைக் கூறிப் பிரிந்து செல்கிறான்.இந்நிலையில், தலைவன் பிரிவால் வருந்திய தலைவி தோழியிடம் கூறியது.
மலை சார்ந்த சூழல் பின்னணியாய் அமைய, பெண்ணின் மனவுணர்வு காட்சியாய் விரிகிறது. மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.அங்கே குளிர்ச்சிக்குப் பஞ்சமில்லை.
தலைவியே சொல்கிறாள்… ‘குளிர்ச்சியான பாறைக்கல்லின் ஒரு பக்கத்தில் தலைவன் என்னோடு கூடியிருந்தான்.இப்போது என்னைப் பிரிந்து எனக்கு நோய் தந்தான். இதனால் ஏற்பட்ட வருத்தத்தினால் என் கண் மட்டுமல்ல;நின் கண்ணும் அல்லவா அழகிழந்தன.’என்று தன் தனிப்பட்ட துயரத்தோடு தோழியையும் உளப்படுத்திக் கூறுகின்றாள்.தலைவியின் இந்த அணுகுமுறையால் தோழியும் தலைவியின் துயரை நீக்குவதில் பெரும் முனைப்பு காட்டுவது இயல்புதானே?
பாடலின் கருத்துரை
தோழி! பெருமழை அலைத்தலால் மாசெல்லாம் நீங்கிய ஈரமான சொரசொரப்பான கரிய பாறைக்கல், (பாகனால்)புழுதி கழுவி சுத்தம் செய்யப்பெற்ற யானையைப் போல காட்சியளித்தது. அக்கல்லின் ஒரு பக்கத்தே கூடியிருந்தான் தலைவன். அவன்தான் நம்மைப் பிரிந்து துன்பம் தந்தான்.அதனால் குவளை மலர் போன்ற நம் அழகிய கண்களில் பசலை படர்ந்தன.
சொற்பொருள் விளக்கம்.
மாசுஅற- புழுதி முழுவதும், கழீஇய- கழுவப்பட்ட, யானை போல- யானையைப் போல, பெரும்பெயல்-பெருமழை, உழந்த-அலைத்த, இரும்பிணர்-கரிய சொரசொரப்பான, துறுகல்-பாறை (மலையின் சிறு பகுதி),பைதல்- ஈரம், ஒருதலை- ஒரு பக்கம், சேக்கும்- கூடும், நாடன்- தலைவன், நோய் தந்தனனே-நோய் தந்துவிட்டனனே, பசலை ஆர்ந்த- பசலை படர்ந்த, நம் குவளை –நம்முடைய குவளை போன்ற , அம் கண்ணே- அழகிய கண்ணே.
தலைவி தலைவனைப் பற்றிக் கூறும்போது ‘சேக்கும் நாடன்’ என்கிறாள். ஈண்டு குறிஞ்சித் திணையின் உயிர்ப்பொருளாம் உரிப்பொருள், பாவூடு நூலாய் கலந்துள்ள தன்மை நினைந்து இன்புறற்பாலது.